ரூ.1000 உதவித்தொகை மாதந்தோறும் பெற நாளை முதல் பள்ளி, கல்லூரி மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

0
7

மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற நாளை முதல் பள்ளி, கல்லூரி மாணவிகள் விண்ணப்பிக்கலாம் !!

புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெற விரும்பும் கல்லூரி மாணவிகள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் அறிவித்துள்ளார்.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் தொகை வழங்கும் திட்டம் தற்போதைய திமுக அரசால் மாற்றப்பட்டு முவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 5-9-2022 அன்று அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, மேல் படிப்பு, தொழில்நுட்ப படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்பட்டது.

தற்போது 2023-24-ம் கல்வி ஆண்டிற்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பயனாளிகளின் சேர்க்கைக்கான வலைத்தள பக்கம் (www.pudhumaipenn.tn.gov.in) நாளை திங்கட்கிழமை தொடங்கப்பட உள்ளது. இவ்வலைத்தளத்தில், மாணவிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நாளை முதல் பதிவு செய்யலாம்.

அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும். நேரடியாக விண்ணப்பிக்கக்கூடாது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்வி படிக்கும் நிறுவனங்களில் 4ம் தேதி முதல் சிறப்பு முகாம்கள் நடைபெறும். மாணவிகள் தவறாமல் அவர்களுடைய ஆதார் அட்டை, ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண், ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு எண் மற்றும் மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

மேல் படிப்பு, தொழில்நுட்ப படிப்புகளில் பயிலும் இத்திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த மாணவிகள் அனைவரும் தாங்கள் பயிலும் கல்லூரியில் உள்ள பொறுப்பு அலுவலர்கள் மூலம் தவறாமல் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here